ஞாயிறு, 1 ஜனவரி, 2023

வைகுண்ட ஏகாதசி அன்று ஏன் #ரத்னாங்கி சேவை மற்றும் ஏன் #பரமபதவாசல் நிகழ்வு ??? இவ்வருடம் கூடுதலாக மூலவரின் முத்தங்கி பற்றிய சிறு பதிவும்.


வைகுண்ட ஏகாதசி அன்று ஏன் #ரத்னாங்கி சேவை மற்றும் ஏன் #பரமபதவாசல் நிகழ்வு  ???

 இவ்வருடம் கூடுதலாக மூலவரின் முத்தங்கி பற்றிய சிறு பதிவும்.

 முதலில் இந்த ரத்னாங்கியை வழங்கியது யார் என்று அறிந்து கொள்வோம் வைகுண்ட  ஏகாதசி அன்று அரங்கனுக்கு சாற்ற பெறும் ரத்னாங்கி அச்சுதப்ப நாயக்கரின்(1560-1614)  காலத்தில் வழங்க பெற்ற அரிய ஆபரணம்(வரலாற்று அறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம்),  முழுவதும் ரத்தினங்களாள் ஏற்படுத்த பெற்ற அங்கி இந்த அங்கி 1900 களில் சற்று மலினம் ஏற்பட்ட படியால் பாகவதர்களாள் திருத்தி செப்பனிடப்பட்டது.

     இப்பொழுது அறிவோம் அறிய விடயத்தை, 

                      அரங்கம் என்பதற்கு ஏற்றார் போல் திருவரங்கத்தில் இந்த இரா பத்து, பத்து நாட்களும் அரங்கன் ஒரு நாடகத்தினை தினம் நடிக்கின்றான்.புறப்பாடு முதலே அந்த நாடகத்தை காண்போம் அரங்கன் மூலஸ்தானத்திலுந்து கிளம்பும் பொழுது சாதார போர்வை அணிந்து (வைகுண்ட ஏகாதசி நீங்கலாக ) இரு கரங்கள் மட்டுமே தெரியும் வண்ணம் எழுந்தருளுவார் ,பின்னர் மேல படியில் மரியாதையாகி உத்தமநம்பி அவர்களுக்கு பரிவட்டம் வழங்க பெற்று. இந்த நாடகத்தை நடத்திவைக்க பணிப்பார் ஸ்தானிகர் .

    அதன் பின் அரங்கன் புறப்பட்டு சேனை முதல்வருக்கு  மரியாதைகள் வழங்கிய பின்பு நாழி கேட்டான் வாயிலை அடைவார் ,அது என்ன நாழி ? கேட்டான் ?  அந்த கதவுகளின்  அருகில் வந்தவுடன் சரியான நேரம் தானா என்று கேட்க படும்,

           நாழி பண்டைய காலங்களில் நாழி என்னாச்சு னு நம்மிடையே  கேட்கும் வழக்கமும் இருந்தது. நேரத்தை நாழி என்று குறிப்பிடுவோம் நாழிக்கு 24  நிமிடம் என்பது இன்னும் சரியான ஒன்று , அங்கு நாழிகேட்கப்படுவதின் ரகஸ்யம் அரங்கன் புறப்படாகிய பொழுதே சாற்றியிருந்த போர்வைக்கு அர்த்தம். தான் ஒரு ஜீவாத்மாவை  போல் இரு கரங்களை தெரிய புறப்பட்டது . அந்த ஜீவாத்மா தான் கிளம்ப வேண்டிய நேரத்தினை அறிந்து  புறப்படுகின்றது .

       ஒரு ஆத்மாவின் ஜீவதசைக்கு பின்பு இரண்டு வகையான பாதைகளிலில்  பயணிக்கும் ஒன்று முக்திக்கு செல்ல கூடிய பாதை  இன்னொன்று எம தர்மலோகமாம் எம  பட்டினம் செல்லும் பாதை   , முக்திக்கு செல்லும் பாதையினை #அர்ச்சிராதி மார்க்கம் என்றும் கூறுவார் .இன்னொன்றை தூமாதி மார்க்கம் என்பார்கள் இப்பொழுது அரங்கன் அர்சிராதி  மார்கத்தினை தான் காட்ட போகின்றான் நாழி கேட்டனை அடைந்த  பிறகு அரங்கன் துறை பிரகாரம் என்னும் பிரகாரம் கடப்பான் அந்த பிரகாரம் மட்டும் சற்றே மாறுபட்டது நடுவினில் முழுதும் தொடர்ச்சியான மண்டபம் இருமறுங்கும் வெற்றிடம் ஏன் இப்படி என்றால் அந்த மண்டபத்திற்கு வெளிச்சம் என்றிட என்பீர்கள். ஆம் அர்சிராதி மார்கத்தினை அடையும் ஜீவன் முதலில் வித் யுத் அதாவது மின்னல் உலகம் பின்பு சூர்ய லோகம் சந்திர லோகம்  என ஒளிபொருந்திய லோகங்களை கடந்தே செல்லும் அதற்க்கு தான் இந்த மண்டபம் வரிசை கட்டு இருக்க வேண்டும் என்பது என் அனுமானம்

       பின்பு விராஜா மண்டபம் அடைவார் அரங்கன் அங்கு வேத பாராயண  கோஷ்டி முதலியன நடை பெறும் ஏன் அங்கு? இந்த ஜீவன் விரஜை என்னும் பேரெழில் ஆற்றை அடையும் அதுவே வைகுண்டத்தின் கரை, அந்த ஆற்றை அடைந்த பிறகு அங்கு வேத கோஷங்கள் முழக்க தேவ மங்கையர்கள் நம்மை நீராடிடுவார்கள் தம் மரியாதையை செய்வார்கள் இது வரை அந்த ஜீவனுக்கு சூக்ஷும சரீரமே இருக்கும் .

     கடைசியாக விரஜையில் அந்த ஜீவன் முழ்கி எழுந்த உடன் அந்த  ஜீவன் நான்கு கரமும் கஸ்தூரி திருமண் காப்போடு துலங்கும் அந்த மேனியினை வார்த்தையால் வர்ணிக்க ஒண்ணா ஒளிபொருந்திய மேனியாய் துலங்கும், வைகுண்ட ஏகாதசி நீங்கலாக மற்றைய நாட்களில்  வைகுண்ட வாசல் அருகில் வந்த உடன் அரங்கனின் போர்வை களையப்பெற்று கஸ்தூரி திருமண் காப்பு சாற்ற பெற்று நான்கு கரத்துடன் அவர் உயர்த்தி காண்பிக்க படுவார்  பின் அந்தமில் பேரின்ப நாடாம் வைகுண்டம் அடைவார் அதனால் தான் அந்த பேரெழில்  ஒளி  பொருந்திய மேனியினை காட்டவே அரங்கனுக்கு #ரத்னஅங்கி சாற்ற பெறுகின்றது .விவரிக்க ஒண்ணா காந்தியினை கூறவே உலகில் கிடைக்கும் இயற்கையான ஒளி பொருந்திய கற்களால் ஆனா அங்கி 

      #வைகுண்டதாமம் 1000  கால்களையுடைய மண்டபத்தின் நடுவே திருமாமணிமண்டபத்தில் இறைவர் எழுந்தருளி  இருப்பார் அந்த இறைவனோடு என்றும் ஆனந்த பரவசத்தில் இந்த ஆத்மா திளைப்பதை தாம் நாம்  அரங்கன் பரமபத வாசல் கடந்து ஆயிரம் கால் மண்டபமான லீலா விபூதி அதாவது இந்த தற்காலிகமாக ஏற்பட்டுத்திருக்கும் இந்த வைகுண்டம் அடைகிறார் இப்படி இந்த ஜீவனின் வழியை , தானே நடித்து அதன் தன்மையினை அணிந்து காட்டுகின்றார். இந்த ஒரு அறிய நாடகம் அறிந்து நாம் இந்த சர்வ முக்கோடி வைகுண்ட ஏகாதசி அனுபவிப்போம் - அரங்கனின் அருள் பெறுவோம்

மூலவர் பெரிய பெருமாள் சாற்றி கொள்ளும்  முத்தங்கியானது விஜய ரங்கா சொக்கநாதா நாயக்கர் காலத்தில் அதாவது (1706-1732) காலத்தில் சமர்ப்பிக்க பெற்றது அந்த முத்தங்கியானது  மலினமடைந்து  பயன்பாட்டில் இருந்து சுமார் நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் இல்லாமல் இருந்தது அதன் பின் அன்றைய திருக்கோவில் தலத்தார்  அர்ச்சகர்கள்  போன்றோர் பெரு முயற்சியால் இரண்டு லக்ஷ்ம் (தூத்துக்குடி முத்துக்கள் , இன்று முது குளித்தால் மறைந்து போய்விட்டது நம் பாரத திருநாட்டில் ) முத்துக்கல் மற்றும் பல இரத்தினக்கற்கள் பதித்த பதக்கங்களும் கூடுதலாக சேர்க்க பெற்று தங்கத்தால் வக்ஷ மஹாலக்ஷ்மி தங்கத்தால் சேர்க்க பெற்றது லக்ஷம் ரூபாய் செலவில் அன்று செய்து முடித்தார்கள். இந்த பணியை சென்னை திருவல்லிகேணியை சேந்த நரசிங்க ராவ் சவான் குடும்பத்தினர் (அன்றைய சித்திரை திருநாள் பலராம வர்மா போன்ற அரசர்களுக்கு இவர்கள் 

 உடைகள் தைக்க மராட்டியதிலிருந்து வரவழைக்க பட்டவர்கள்) செவ்வ்வனே செய்து முடித்தனர் அந்த அங்கி சமர்ப்பித்த பொழுது மாட்டு வண்டிகளில்  சித்திரை உத்திர வீதிகளில் எடுத்து சேலை பெற்று அரங்கற்கு சமர்ப்பிக்க பெற்றது இந்த நிகழ்வை அன்றைய ஹிந்து நாளிதழ் ஜனவரி  6ஆம்  தேதியிட்ட 1962  வருடத்திய நாளிதழில் பிரசுரிக்க பெற்றுள்ளது. இந்த நிகழ்வின் பொழுது எடுத்த புகைப்படம் இன்றும் கோயில் அருங்காட்சியத்தில்  பக்தர்கள் பார்வைக்காக உள்ளது .அது மட்டும் அல்லாது முத்து திண்டு, முத்து  மாலை,முது குடை  மற்றும் உற்சவர் முத்தங்கி என எல்லாமும் சீர் செய்ய பெற்றது செய்து. காலத்தால் என்றும் அழியா காவியமாக இன்றும் விளங்குகின்றது அனைவரும் அரங்கனை தரிசிக்கும் பொழுது அளப்பரிய பனி செய்த மன்னர்களையும் நினைவில் கொள்வோமாக.

-சுதர்சன்

திங்கள், 31 மே, 2021

அழகிய மணவாளன் நம்பெருமாளான கதை

 


 

கால சக்கரத்தை  பின்னோக்கி 650 ஆண்டுகள்  நகர்தினால்  வரலாற்றினில் இந்நாள்,  வைகாசி 17 பரிதாபி ஆண்டு அன்று திருவரங்கம் எப்படி இருந்திருக்கும் என்று  மனக்கண்ணுக்குள் ஓர் அலசல் ,


மூலவர் பெரிய பெருமாள் அமரர் சில்பியின் ஓவியம்  யாக பேரர் திருவடி அருகில் 

 செங்கதிர் மெல்ல உதிக்கின்றது மக்கள் தம் அன்றாட நிகழ்வுகளை செய்ய தொடங்குகின்றனர் , வழக்கம் போல் ஒரு பெரியவர் பாழ் பட்டு நின்ற திருமதிலை பார்த்து சுந்தரபாண்டியன் எடுப்பித்தாயிற்றே  இப்படி பாழ் பட்டு கிடக்கிறதே என்று என்று விடிவு காலம் வரும் என்று விடியலிலேயே புலம்பிக்கொண்டு வெளியே  கிளம்புகிறார் , இன்னொருவரோ பெருமாள் சன்னதி ஒழுகுகின்றதாமே ,

 என்ன பா செய்ய!!!! 

    கோவில் முழுக்க இப்படி தான் இருக்கின்றது பராந்தகனாலும் சுந்தர பாண்டியனாலும் பொன்வேய்ந்தவிமானம் இன்னிக்கு இப்படி , இருக்கே  சரி எல்லாம் சீர் செஞ்சு அரங்கன் அருள்வான் , மீண்டும் நல்ல நிலை திரும்பும் என்று சொல்லி முடித்தால் 

யாக பேரர் திருவரங்க மாளிகையார் 

     நம்பி ஓடிவந்தான்,மூச்சிரைத்த வாறே  மாமா லக்ஷம் படை வீரர்கள் வருகிறார்களாம்!!!! கோபுரப்பட்டியில் முகாம் அமைத்திருக்கிறார்களாம்!!!! என்றான் , அரங்கா!!!!  இது என்ன சோதனை ? என்று திருவரங்கமாளிகையாரை (இன்றைய யாக பேரர்) நோக்கி புலம்பலானார், நம்பி தொடரலானார் மாமா அந்த படை நடுவே பல்லக்குகள் வேற வருதாம் அநேகமா ராஜாவா  இருக்குமோ??? மூணு பல்லக்காம்  அதுவும் மூடு பல்லாக்காம் , மாமா மீண்டும் கேட்டார் என்னடா  படை எடுப்பா !!! இல்ல சேவிக்க வறாளா!!!! , ஒன்னும் புரியலையே திருவரங்கமாளிகையாரேனு  புலம்பலானார் , 

    இன்னொரு  அம்பி வந்தான் மாமா கலியுகராமன் திருவீதில (இன்றைய சித்திரை வீதி) ஒரே கலேபராம இருக்கு,,  எல்லாம் பயந்துண்டு பொலம்பிண்டு இருக்கா , அந்த உடைஞ்ச தேர் வடக்கு கலியுக ராமன் வீதிக்கிட   பெரியவாள்ளாம் பேசிட்டு இருக்கா , உடனே ரெங்கராஜா பட்டர்  ஆலயத்தின் பாழ்பட்ட கதவை கஷ்ட பட்டு சாத்திட்டு வீதிக்கு வந்தார்.


அழகிய மணவாளன் கிராமம் நம்பெருமாள் கடைசியாக எழுந்தருளிய ஊர் 
    எங்கும் ஜனம் ஒரே பயம் , அங்க பேச்சு சத்தம் , என்னப்பா பண்ணெண்ண்டாயிரம் பேருக்கு இப்போ தானே ச்ராத்தம் பண்ணினோம் இப்போ மறுபடியும்  நெலமை ரொம்ப மோசமாயிட்டோ !!!! அரங்கானு புலம்ப!!!! 

    எல்லாம் அகண்ட வடதிருகாவேரியே  (இன்றைய கொள்ளிடம்) பாக்கறா,  ஒரே புகை மண்டலம் வெய்ய காலமானதால் புழுதி புயல் போல கிளம்ப இங்க எல்லாருக்கும் பீதி கிளம்பிவிட்டது , அய்யா படையெடுப்பே தான்னு!!!!!!! ஒருத்தர் சொல்ல எல்லாம் பயந்துண்டு பார்க்க மெல்ல ராஜ சின்னங்களா தெரியுது!!! மகர தோரணம் எடு எடுபிடிகள்ளாம்  பட்டது யானைகள்


   குதிரை படை சேவகர்களெல்லாம் பெரிய அங்கி , கைகள்ல  வல்லயத்தோட ஒக்காந்துண்டு வராங்க  எக்காளம்  வாசிக்கறது விண்ண முட்டுது  ஆனா  வேகம் இல்லை , மக்கள் சுதாரிச்சிக்கிட்டாங்க மெல்லவே சுவாமி படை எடுப்பு  இல்லை,  ராசா வரார் போல , உடனே ஒருத்தர் அப்போ நாம கோயில பத்தி முறையிடுவோம் னு சொல்றார் , அத தான் ஸ்வாமி பண்ணனும் சபைல தீர்மானமா முடிவு பண்ணி ஸ்தலத்து  ஆச்சார்யாள் மூலமா சொல்லிடலாமனு பேசிண்டே இருக்கப்ப   ஒரு குட்டி பய்யன் அழகியமானவளன், அப்பா அங்க பாருங்கோ கனக தண்டியல்(தங்க பல்லக்கு)  மூணு  வர்றது அதுல தானே ராஜ வருவார்  , ஏன் பா அது மூணு வர்றது ???, அப்பா உடனே மகனிடம் ராணியாரா  இருக்கும் டா , செத்த சும்மா இரேன் டா  , பக்குனு இருக்குனு சொல்றார் ,  பந்தங்கள் முத்து குடை பிடிக்க  பட்டுல சென்ஞ்ச பன்னாங்கு (பல்லக்கு மேல் போர்த்தும் துணி ) ஆனா பல்லக்கு மூணும் மூடி இருக்க யார் வரான்னு தெரியலையே  திருவரங்க மாளிகையாரே!!!! னு  புலம்பல் சத்தம் ,

தெற்கு சித்திரை வீதியில் உள்ள கோபுரத்தில் உள்ள  மூலிகை ஓவியங்கள் புற்பாட்டை குறிப்பது இங்கு கதையோடு ஒத்து இருப்பதால் எடுத்து கொண்டேன் 

    அதுக்குப்பின்னால வெள்ளை குதிரை மேல திருமுடி சார்த்தி நெத்தில திலகத்தோட   கட்டாரிய  கைல ஏத்திக்கிட்டு ஒருத்தர் உக்காந்திருக்க வெறுங்கால்களோட இருக்கார்,   ஆனா  ராசா கணக்கா அவ்ளோ நகை போட்ருக்கார் , யார்பா  இது சேனாபதியானு அழகிய மணவாளன் கேக்குறான் இருக்கலாம் டா!!!  அவர் பக்கத்துல  சேவகர்கள் குடைய  பிடிச்சுட்டு வராங்க கூடவே ஒரு குதிரைல ஒரு பெண்மணி சாய கொண்டையோட  அழகா சந்திர பில்லை  சூர்ய பில்லை ராக்கொடி எல்லாம் அணிந்து நீளமா பொட்டு  வச்சுண்டு கழுத்தில மகரகண்டி போட்டுக்கிட்டு கச்சை கட்டிட்டு வாளோட இருக்கா  பின்னால லக்ஷம் வீரர்கள், திருவரங்கமே  அல்லோலப்படுது , அரங்கானு பொலம்பறாங்க கூட்டம் 

    மேல மொத்த  படையும் வடக்கு வாசல் வழியா வர்றது ஊர் வலுவெல்லாம் போனதால கதவை சாத்த  முடில மக்கள்  சாத்த  எத்தனிக்கிறாங்க , ஒற்றன் வந்து ஏதோ சொல்றான் , அந்த கதவை பிடித்தவர் புரிஞ்சி பதில் கொடுக்கிறார் , சகஜமா அன்று எல்லாருக்கும்  மூன்று , நான்கு மொழி தெரிஞ்சது , உடனே அந்த வாயில் காப்பாளர் ஊரார்  வந்து சொல்றார்  ராஜா  வந்திருக்கார் கூடவே நம்ம உத்தமநம்பியும் இருக்கார் பொக்கிஷத்தோடனு  சொன்ன உடனே மக்கள் வரவேற்கிறாங்க

     ஊர் பெரிய மனுஷர்கள் போய் வரவேற்கிறாங்க படைகள் ஊற சுத்தி வளச்சுடுச்சு எங்கும் பாதுகாப்பு , அந்த குதிரை மேல வந்தவர் மற்றும்  கனக தண்டியல்கள் மற்றும் முக்கிய பட்டவர்களோட கோவில் நோக்கி போறாங்க ,

    அன்றைய அரங்கம் 
குதிரை மேல இருந்தவர் மன ஓட்டம் , அங்கேயும் இங்கயுமா ஓடுது  பொன்வேய்ந்த உடைஞ்ச கதவுகள்,  இடிந்த கோபுரங்கள்,  பாழ் பட்ட வீடுகள் , வீதிகள்ல அங்க அங்க கல்வெட்டு துண்டுகள் , சங்கு, தந்த,  வலையல் உடைஞ்சு கிடக்கு மதில்கள் சரிஞ்சு கிடக்கு பாத்துட்டே வரார் குதிரையை நகர்த்த  சொல்றார்  சேவகன் கிட்ட  உடைஞ்ச தேர் கிடக்குது சுந்தரபாண்டியனோட மீன் சின்னம் பாக்கறார் , குதிரையை மெல்ல நகர்தறார் , கயல் மீன் பொறித்த துலாபார மண்டபம் சாஞ்சு  கிடைக்கு , என்ன என்று செய்கைல  கேக்கிறார் ஒரு பெரியவர் இது மாறவர்மன் சுந்தர பாண்டிய மகாராஜா முத்துக்களால் துலாபாரம் கொடுத்த மண்டபம்னு சொல்றார் மெல்ல நகர்ந்து போன ஒரு ஒடஞ்ச படகு கிடக்கு , என்னது படகுனு கேக்றார்  குதிரை வீரன் , உத்தமநம்பி ,அது  சுந்தரபாண்டியர் அரங்கற்கு கஜ துலாபாரம் கொடுத்த படகுனு  சொல்றார்  ,ஒ ஒ னு னு சத்தம் கொடுத்தார்  அந்த குதிரை வீரன், ஒரு வைணவ பெரியவர் உடனே  எங்க ஆழவார் இப்படி  தான் பாடறார்

கயல் சின்னம் வடக்கு சித்திரை வீதி கோபுரத்தில் 

"ஓ ஓ உலகினர்  இவன்ற றே ஈன்றோள் இருக்க மனை நீராட்டி"  என்று  , குதிரை வீரன் ரசித்த படியே மெல்ல ஒரு மந்தகாச புன்னகை  நகர்கிறார் , அங்கே சோழ மன்னவர் எடுப்பித்த கோபுரங்கள் சரிந்து பட்டு கிடக்கின்றது, திருவிக்ரமன் எடுப்பித்த என்ற வரிகளெல்லாம் காண்கிறார், ராஜராஜன் நெய்கொடுத்த கல்வெட்டு  மெல்ல நகர்ந்தால்  உடைந்த பல்லக்கு கொம்புகள் ,மேல நகர நகர எங்கும் பாழ் , வீதிகள்ல  உடைஞ்ச செப்பேடுகள் , குதிரைவீரன் கண்கலங்கியது கூட வந்த அந்த பெண்மணியும் எல்லாத்தையும்  குறிப்பெடுத்துகிட்டா  மெல்ல அனைவரும் தெற்கு நான்முகன் வாயில் வந்தணைந்தனர் , செப்பு கலசம் கொண்டு வந்தார்கள் மன்னரை வரவேற்க   , குதிரை வீரரிடம்  தேவரீர் யார்னு அர்ச்சகர் கேட்க 

கங்கை தேவியின் மதுராவிஜயன் சரித்திர புத்தகம்

கங்காதேவியின் மதுரா விஜயம் சரித்திர நூல் அந்நியரை வெற்றி கொண்டது 



மன்னரை வரவேற்கும் காட்சி விஜயநகர ஓவியங்கள் தாயார் சந்நிதி 

     ஒரு சேவகன் முந்திக்கொண்டு மதுரை மீது  அந்நிய படை வென்ற கோபனார்யார், புக்க மஹாராஜா பையன் விஜயநகர சம்மராஜ்யத்தவர்   அம்மணி தான் கங்கா  தேவி   கூட நின்ன   உத்தம நம்பி சுவாமி  இவங்கள அடியேன் தான்  கூட்டி  வந்தேன் னு சொல்ல, சேவகனும் இவங்க்லயா யார்னு கேக்கறீங்கனு கோவ  பட்டான் , மக்கள் திகைத்து வணங்கினர் ,அப்போ ஒருத்தர் கேட்டார் அந்த மூடு பல்லக்குல இருக்கறது யார்னு கேட்க , உத்தம நம்பிகள் அமைதியா விஜயநகரத்து கோபனார்யர பார்க்க,    கோபனார்யர்  சொல்கிறார் மன்னர் மன்னவர்னு  , கூட்டத்தில் அழகியமணவாளனு  ஒரு   சிறுவன் , இவரை விட பெரிய ராசா போலனு சொல்ல , ஆமாம்னு கோபனார்யர் சொல்ல ஊரே எதிர்பார்ப்பு யாரா இருக்குமோன்னு பல்லக்குகள் மூடின படியால் மக்கள் மனசுல ஒரு ஆர்வம்,

   உறையூர் செல்ல குடமுருட்டியை  கடக்கும் தருணம் அன்று இப்படி தான் சென்றாரோ 

கோபனார்யர் பல்லக்குகள் உள்ளே வரட்டும் சொல்லிட்டார் உடனே  மக்கள் ஒரு விதமா பார்க்க,  ஏதும் பேசாம உள்ளே நுழைகிறார்கள் இடிந்த திருவந்திக்காப்பு மண்டபம்  தாண்டி பக்ஷிராஜன் தோப்புக்குள்  உடைந்த இறகுகளோட கருடன் கடக்கிறாங்க அங்க அங்க உடைஞ்ச துலாபாரமண்டபங்கள் ,அப்புறம்  உடைஞ்ச கொடி மரம் பார்க்கிறார் ,  ஒரு வைணவ பெரியவர் இதாங்க சுந்தர பாண்டியர் பொன்னாலே செய்த துவஜஸ்தம்பம் இன்னிக்கு ஏதும் இல்லாம ஒடஞ்சு நிக்குது உடனே   அங்கேயே கோபனார்யார் பல்லக்கை இறக்க சொல்லி திரும்பி பார்க்க சேரனை வென்றான் மண்டபம் தெரிஞ்சது பாண்டியன் சேரனை வென்று கட்டின மண்டபம் னு அர்ச்சகர் சொல்ல அதை அமைதியாய் கேட்டுக்கொண்டே பல்லக்கின் திரையை விளக்க சொன்னார், மன்னார் மன்னவரை மக்கள் காணட்டும்னு உரக்க  சொல்ல , பல்லக்கின் திரை விளக்க ஒரு வயதான பெரியவர் வந்தார் கூட்டத்துல  சலசலப்பு எதுக்கு இப்போ இவ்வளவு வயசானவர் வந்து திறக்கறார்னு,  திரை விளக்கப்பட்டது , அரவரச பெருஞ்சோதியில் பள்ளிகொண்ட அழகிய மணவாளர் பிரயோக சக்கரத்துடன்  மந்தகாச புன்னகையுடன் அஞ்சேல் என்று அபயம் காட்டி   

                                "திருக் கையில் பிடித்த திவ்ய ஆயுதங்களும்

வைத்து அஞ்சேல் என்ற கையும் 

கவித்த முடியும் முகமும் முறுவலும்

 ஆசன பத்மத்திலே அழுத்தின திரு வடிகளுமாய் 

நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்""




நம்பெருமாள் உபயநாச்சியார்  மூடு பல்லக்கினுள் 
ஸ்ரீ தேவி நாச்சியார் பூ தேவி நாச்சியார்

 என்று ஸ்ரீ மணவாள மாமுனிகள் வியாக்யானம் செய்தபோலே அழகிய மணவாளன் எழுந்தருளி இருக்க மக்கள் ஏறிக்கொண்டு பார்க்கிறார்கள் அடுத்த இரண்டு பல்லக்குகள் திரை விளக்கப்பட்டது 

வைகுண்டேது பரே லோகே ஶ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி: |ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தை: பாக்வதைஸ் ஸஹ 

என்பது போல ஸ்ரீதேவி நாச்சியாரும் பூமி தேவி நாச்சியாரும் நம்பிள்ளை வியாக்கியானத்தின் போலே  காட்சி கொடுக்க இருந்தது அந்த நிகழ்வு


திருவரங்கமாளிகையாரும் நம்பெருமாளும் யாகசாலையில் மூலவர் பாலாலயத்திற்கு பிறகு 

         அந்த தள்ளாத பெரியவர் , அடியேன் ஒரு கொடவர்,  இங்க  தான் கைங்கர்யம் செய்தேன் இவர் தான் அழகிய மணவாளன் இங்கு உற்சவாராக எழுந்தருளி இருந்தவர் என்று கூற அர்ச்சகர்  முதல் குழந்தைகள் வரை எல்லோரும் வியப்போடு இவரா!!!  இவரா !! என்று புருவம் நெறிக்க!!!!! அந்த பெரியவர் கூறலானார் , பங்குனி எட்டாம்  திருநாள் அழகிய மணவாளர் திருமுன்னே திருவுள சீட்டு கேட்டு அனுமதி பெற்று எல்லைக்கரை மண்டபம் லேர்ந்து படையெடுப்புக்கு முன்னே கிளம்ப,   பிள்ளை லோகாச்சாரியார் எங்களுக்கு தலைமை தாங்க, ஜ்யோதிஷ்குடி செல்லுகையில் திருநாடலங்கரித்தார் , பின்னர் எங்களுடன் வந்தோரோடு திருமாலிருஞ்சோலை  அடைந்தோம் கூரத்தாழ்வார் வசித்த அவ்விடத்தை நீங்கி குகையில் நம்மாழ்வாரும்  அழகியமனாளரும் ஒருங்கே இருந்தனர்  பின்னர் தனி தனியே பிரிஞ்சு  அழகியமணவாளரோட  கோழிக்கோடு ,திரிகடம்பபுரா (திருக்கணாம்பி) சென்றோம் அங்கும் பாதுகாப்பின்மையால் அடைந்தோம் 

பந்த காட்சி இப்படி தான் இருட்டில் பயணப்பட்டானோ அரங்கன் 

அங்கே 15 சமவஸ்திரம் பாதுகாத்தோம் நம்மோடு வந்தோரெல்லாம் பரமபதிக்க அடியேனும் இன்னும் சிலரும் திருமேனியை கட்டிக்கொண்டு  திருமலை காடுகளை புகுந்து ரங்கநாயக  மண்டபத்தினுள்ளே இருபத்து ஆறு சமவஸ்திரம் (வருடங்கள் ) இருந்தோம்


ரெங்கநாயக மண்டபம் திருப்பதி 


நம்பெருமாள் ஜீயபுரம்  சென்று திரும்புதல் அன்று இப்படி தான் காடு மேடெல்லாம் சுற்றி திரிந்தாரோ 

 தற்போது எல்லா கால காலங்களும் அடங்கிய படியால் செஞ்சியில் மன்னர் முன்பு உத்தம நம்பி ஸ்வாமிகள் விண்ணப்பம் செய்ய மன்னர் லக்ஷம் படையோடு அடியேனோடு நம்பெருமாளையும் கூட்டிக்கொண்டு இங்கெழுந்தருளினார் என்று கூற ஒரே சலசலப்பு கூச்சல் , இல்லை இவர் எங்கள் உற்சவ  மூர்த்தி இல்லை என்று கூற  

ஈரம்கொல்லி வண்ணானுக்கு  அரையர் தீர்த்தம் சாதித்தல் 

 பலவாறு அந்த பெரியவர் போராடினர் ஊரார் ஏற்றுக்கொண்ட பாடில்லை அப்பொழுது திருக்கோவிலில் ராமானுஜரால் ஏற்படுத்த பெற்ற  பத்து கொத்துகளில்  ஒருவரான  வண்ணான் , தான் கண்டுபிடிப்பேன்  என்று சொன்னார் , என்னய்யா  உமக்கு தான்  கண் தெரியாதேனு சபைல இருக்கவங்க சொன்னாங்க , இல்ல சாமி கண்ணு தான் தெரியாது ஆனா  சாமி துணி துவச்சுருக்கேன் வாசம்  வச்சு கண்டுபிடிப்பின் சாமினு சொல்ல , கோபனார்யாரும் ஆமோதிச்சார் சேரனை வென்றான் மண்டபத்துல திருஅரங்கமாளிகையரும் அழகியமானவளரும் ஒரு சேர எழுந்தருள பன்னிட்டாங்க 

திருமஞ்சன கோலம் 

    கோபனார்யார் முதல் அரையர் பெரியநம்பிகள் பட்டர் என பெரிய கூட்டமே நிக்க திருமஞ்சனம் நடக்குது ஊரார் எல்லாம்  அச்சாசப்ல ரெண்டுபேரும் இருக்காளே யார்தா அழகியமணவாளன்னு நிக்க ரெங்கராஜபட்டர் திருமஞ்சன ஆடையை கலைஞ்சு  கொடுக்க இசைபாடும் பெருமாள் கூட்டத்தாரான அரையர்  அந்த வண்ணனுக்கு கொடுக்கறார்  வண்ணானும் சாப்பிடறார் மக்கள் எல்லாம் வண்ணானையே பாக்குறாங்க  முதல்ல திருவரங்கமாளிகையார் ஆடைலேர்ந்து தீர்த்தம் கொடுக்க அவர் சாதாரணமா சாப்பிட்டார்  , பின்ன அழகியமணவாளனோட ஈரவாடை கொடுக்கபடுது வாங்கி சாப்பிடறார் , நெஞ்ஆழும்  கண் சுழலும்னு திருமங்கை ஆழ்வார்  சொல்றப்பல   அவர்  கண்ணெல்லாம் விரியுது,  கை  நடுங்குது நா தழுதழுக்குது ஆனந்த  கண்ணீர் விழியோரம் கொட்டுது அரசர் முதல் கடைநிலை ஊழியர் வரை அவரையே பாக்குறாங்க  பெரும் அமைதி , 

        இவரே "நம்பெருமாள்" சொல்றார்  ஜெய கோஷம் முழங்குது  கோபனார்யர் முகத்துல சந்தோஷம் அந்த வயோதிக பெரியவருக்கு  ஆனந்தம் நற்பெத்தெட்டு ஆண்டு போராட்டம் முடிஞ்சுருச்சுனு,  உடனே ஸ்தானிகர் பூர்ணமா திருமஞ்சனம் முடிச்சிடலாம் சுவாமினு சொல்லி அருளப்பாடு செஞ்சு முடிச்சு கட்டியம் சொல்றார் ஸ்தானிகர் """'சோழாயிரம் கொண்டான் சுந்தர பாண்டிய பிடித்தான் திருமஞ்சன சாலன் பட்டர் அருளப்பாடு சேவி "" னு சொல்ல  வெள்ளி திருமுற்றமே  அதிர  பெரிய மேளம் இசைக்க அரையர் மஞ்சனமாட வாராய் னு பாட ரெங்கராஜா பாட்டர் திருமஞ்சனத்தை செய்யறார் ஆயிரம் நாவலும் புகழ ஓன்னா வடிவழகோட இருக்க நம் பெருமாளுக்கு ஆயிரம் துளைகொண்ட சஹஸ்ர தாரைல பண்ணத கண்டு அவ்ளோ சந்தோஷம் கோபநார்யர்க்கு 

நம்பெருமாள் சஹஸ்ர தாரையில் வெந்நீர் திருமஞ்சனம் கண்டருளல் 

    உடனே கோவிலை திருத்தி சீர் செய்ய உத்தரவிடறார் அதுக்கு பொருள் இல்லாததால பதினேழாயிரம் பொன்னும் 52 கிராமங்களை உத்தமநம்பிகள் கையிலே கொடுத்து பின்னர் மதிலில் சாசனம் வெட்ட  ஆணையிடுகிறார் குறிப்பெடுப்பவன் குறிப்பெடுத்து

ஸ்வஸ்திஸ்ரீ: பந்துப்ரியே சகாப்தே (1293)

ஆநீயாநீல ச்ருங்கத் யுதி ரசித ஜகத்

ரஞ்ஜநாதஞ்ஜநாத்ரே: செஞ்ச்யாம் ஆராத்ய கஞ்சித் ஸமயமத நிஹத்யோத்தநுஷ்காந் துலுஷ்காந்  லக்ஷ்மீக்ஷ்மாப்யாம் உபாப்யாம்

ஸஹநிஜநகரே ஸ்தாபயந் ரங்கநாதம் ஸம்யக்வர்யாம் ஸபர்யாம் புநரக்ருத

 விச்வேஸம் ரங்கராஜம் வ்ருஷபகிரிதடாத்

 கோபணோ ஹோணிதேவ:

 நீத்வா ஸ்வாம் ராஜதாநீம் நிஜபலநிஹதோத்

 ஸிக்த தௌலுஷ்க ஸைந்ய:

க்ருத்வா ஸ்ரீரங்கபூமிம் க்ருதயுகஸஹிதாம்

 ...........................................

 ஸம்ஸ்தாப்யாம் ஸரோஜோத்பவ

 இவ குருதே ஸாதுசர்யாம் ஸபர்யாம்

தற்போதைய உத்தமநம்பி ஸ்வாமிகள் 

என்று திருமதிலில் வெட்டினர் கங்கா தேவியார் மிக்க சந்தோஷம் அடைந்தார் அதன் பின் செங்கோலுடய திருவரங்க செல்வாராக நம்பெருமாள் ஹரிஹராயன் கட்டிலில் சேர பாண்டிய சிம்ஹாசனத்தில் சுந்தர பாண்டிய முத்து  பந்தலின் கீழே எழுந்த்த்தருளி அருள் புரிந்தார் , திருவரங்க மாளிகையாரை யாகபேரராக எழுந்தருள பண்ணினார்கள்  மக்களும் பிரஜைகளும் ஆனந்தம் அடைந்தனர் , இந்த ஈரவாடைய எல்லா திருமணஜண காலத்துலயும் செய்ய சொல்லி உத்தரவாகியது கூட இருந்த சால்வ மன்னன்  நான் அந்த அந்த கோடி மரத்த  வெங்கலத்துல பண்ணி வைக்கிறேன் னு சொல்லி அதையும் செஞ்சு தேர் தட்டு பண்ணி சமர்ப்பித்தார். பின்னர் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து விருப்பண்ண உடையார் துலாபாரமேறி  சித்திரை மாசம் ரேவதி கூடிய நன் நாளில் தன பெயரால் உற்சவம் ஏற்படுத்தினார்  இப்படியாக அந்த கால சக்கரம் சுழன்று நிற்கின்றது அரங்கன் அருளால்


நம்பெருமாள் பயணித்த பாதை

1323 மார்ச் -  ஸ்ரீரங்கம்

1323-ஏப்ரல்-ஜூலை -  ஜ்யோதிஷ்குடி

1323-25  - திருமாலிருஞ்சோலை    (அழகர்மலை)

1325-26 - கோழிக்கோடு

1326-27 -திரிகடம்பபுரா (திருக்கணாம்பி)

1327-28 -புங்கனூர்வழியாக மேல்கோட்டை

1328-43 - மேல்கோட்டை (15 ஆண்டுகள்)

1344-70 - திருமலை (26 ஆண்டுகள்)

1371 - செஞ்சி, அழகியமணவாளம் கிராமம்,

1383ஆம் ஆண்டு விருப்பன் திருநாள் கொண்டாடப்பட்டது.

 என் திருமகள் சேர் மார்வனே! என்னும் என்னுடை ஆவியே என்னும்,

நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே! என்னும்,

அன்று உருவேழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே! என்னும்,

தென் திருவரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே!

— திருவாய்மொழி

வரலாற்று தரவுகளை கொண்டு அடியேன் மனதில் அந்நாள் எப்படி இருந்திருக்கும் என்று ஓர் கற்பனை காட்சியாய் விரித்தேன் பிழை இருப்பின் பொறுத்தருளுக 

பட உதவி : திரு .  விஜய் வைபவ் திரு .,பாலாஜி விஜய், திரு .விஜயராகவன் கிருஷ்ணன், திரு அரவிந்த் ஸ்ரீநிவாசன் மற்றும் இனைய தரவுகள் 

p.c Mr.Balaji vijay , Mr.Vijay vaibhav , Mr.Vijayaragavan krishnan, aravind srinivasan and google sources




வைகுண்ட ஏகாதசி அன்று ஏன் #ரத்னாங்கி சேவை மற்றும் ஏன் #பரமபதவாசல் நிகழ்வு ??? இவ்வருடம் கூடுதலாக மூலவரின் முத்தங்கி பற்றிய சிறு பதிவும்.

வைகுண்ட ஏகாதசி அன்று ஏன் #ரத்னாங்கி சேவை மற்றும் ஏன் #பரமபதவாசல் நிகழ்வு  ???  இவ்வருடம் கூடுதலாக மூலவரின் முத்தங்கி பற்றிய சிறு பதிவும்.  ம...